'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக' (லூக் 2,4)
இயேசுக்கிறிஸ்துவின் மனுவுரு ஏற்பு ஒரு வரலாற்று நிகழ்வு. அது அமைதியை அளிக்கும் என்பதும் ஆண்டவரின் திட்டம் அத்தோடு அது அவரது சித்தமும் ஆகும். அது இயற்கையின் நியதியும் கூட.
அந்த அமைதி யாருக்கு சாத்தியமானது?
ஏளிமை வாழ்வு வாழந்தவர்களுக்கு!
தம்மை வெறுமையாக்க, வறுமையை சந்தித்தவர்களுக்கு!
மனிதத்தை, மகத்துவமாய் மதித்தவர்களுக்கு!
மதம், இனம், மொழி, எல்லை கடந்த ஆன்மீகம் தேடியவர்களுக்கு!
மகாத்மா காந்தி சொன்ன சாந்தி அல்ல அது.
மகா வல்லமை மிக்கவர் அருளிய அமைதி அது.
அதை சாத்தியமாக்கியவர்கள் இடையர்களும் ஞானிகளும் இது வேதம் சொல்லும் உண்மை.
இடையர்களும் ஞானிகளும் எல்லைக்குட்பட்டவர்களல்ல,
இனவாதத்துக்குள் முடங்குபவர்களல்ல,
சடங்குகளுக்குள்ளும் சம்பிரதாயங்களுக்குள்ளும் முத்தெடுப்பவர்களல்ல. மாறாக
அவர்கள் விதிவிலக்கானவர்கள்.
எல்லை தாண்டும் முன்னரங்க வீரர்கள்.
அப்படியிருந்தால் தான் அவர்களால் உயிர் வாழ முடியும்.
இந்த உண்மைகளை கடைப்பிடிக்கவே இவர்கள் உதாரணங்களாகத் தரப்படுகிறார்கள்.
இயேசுக்கிறிஸ்துவின் மனுவுரு ஏற்பு, சில மனிதர்களுக்கு சவாலாகி சங்கடங்களையும் ஏற்படுத்தியது என்பது கண்கூடு. குறிப்பாக ஏரோதுவுக்கும் அவனது படைப் பட்டாளங்களுக்கும் ஆண்டவரின் செய்தி அடியாக விழுந்தது. சவாலை சரியாக சந்திக்காத ஏரோதுவும் அவனது அடியாள்களும் அக்கிரமத்தையும், அநீதியையும் அழுகுரலையுமே சமூகத்தில் தோற்றுவித்தனர்.
எமது சமுதாயத்திலும், இயேசுக்கிறிஸ்துவினுடைய வரலாற்று-மனுவுரு ஏற்பு நிகழ்வு, பிழையாக கொண்டாடப்பட்டு ஆடம்பரமான கொண்டாட்டங்களை மன்னிக்கவும், களியாட்டங்களை ஏற்றுக்கொள்ளவும் நம்மை பழக்கிவிட்டது. இது அன்றைய நாள் சவாலை மீண்டும் தந்திருக்கிறது. சவாலை சரியாக சந்திக்காத மனிதர்கள், ஏரோதின் அதே அக்கிரமங்களையும், அநீதியையும், அழுமுரலையும் தோற்றுவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நுகர்வுக்கலாச்சாரம், புவிவெப்பமாகுதல், பொருளாதார நெருக்கடி, ஆவா குழுவின் அட்டகாசம், விதைக்காமல் முளைத்தெழும் விகாரைகள், இரத்த பலியெடுக்கும் யுத்தம், அர்த்தமில்லா ஆரவாரங்கள் சடங்குகள் அனைத்தும் நவீன ஏரோதுக்களின் அக்கிரமங்களும் அநீதியும் ஆகும். ஆதனால் ஈராக்கின் அலெப்போவில் மட்டுமல்ல அயலிலுள்ள கிராமங்களிலும் அர்த்த ராத்திரியிலும் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஏப்படி இந்த நவீன ஏரோதுக்கள்? ஏன் இந்த அழுகுரல்கள்? சர்வதேச ஆரசியல் செய்பவர்கள் எல்லை கடந்த ஆன்மீகம் தேடவில்லை, பொருளாதார சமூக கொள்கை அமைப்பவர்கள் சமத்துவத்தை யாப்பாக்கவில்லை, அநீதிக்கெதிரான புரட்சி செய்பவர்கள் மனிதத்தை மனம் கொள்ளவில்லை, மாறாக அவர்களெல்லாரும் வெறும் அரசியல்வாதிகளாக, சமூக வாதிகளாக, புரட்சிவாதிகளாக, பொருளாதார நிபுணர்களாகவே இருக்கின்றனர். ஆதனால்தான் இன்றும் அழுகுரல்களும், இரத்தக்கறைகளும்.
ஆகவே 2016ம் ஆண்டு இயேசுக்கிறிஸ்துவின் மனுவுரு ஏற்பு அமைதியை கொணர, சவாலை சரியாக சந்திப்போம். கடவுள் விரும்பும் எளிமை, வெறுமை, பகிர்வு, மற்றும ஆன்மீகத் தேடல்; எனவே மனுவுருவெடுக்க சந்தர்ப்பம் கொடுப்போம்.
இயூஜின் அமல்ராஜ் அமதி,
வளனார் அமதிகள் சிறிய குருமடம்,
யாழ்ப்பாணம்,
வெள்ளி, 23 டிசம்பர், 2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக