இறைவனை நோக்கிய மனிதனின் தேடல்
படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இறைவன் மனிதனை நாடினார், மனிதன் இறைவனைத் தேடினான். இறைவனின் நாடல் மனிதனுக்கு வாழ்வு கொடுப்பதற்காகவே என்பது தெளிவு. ஆனால் மனிதன் இறைவனை ஏன் தேடினான்? எதற்காக தேடினான்? எப்போது தேடினான்? தேடலின் விளைவு என்ன ...?
இறைவன் தனக்கென மக்களை இனங்கண்டார். ஆனால் அம்மக்களின் வாழ்வு அவருடன் ஒத்துப்போகவில்லை. அவர்கள் வாழ்வின் நிலைகளை புரிந்துகொள்ள சில பாடங்களை அவர்களுக்கு காண்பித்தார். உண்மையை புரிந்துகொண்ட மக்கள் இறைவனை தேடினர். ஆனால் எங்கு எப்படி தேடுவது என்பதனை புரியாமையால் அவர்களுக்கு தேடல் கடினமானது. காலம் நிறைவுற்றபோது மனிதனின் தேடலை சுகமாக்க இறைவனே மீண்டும் மனிதனை நாடினார். மனித வடிவில் மண்ணில் மலர்ந்தார். இறைவாக்குகளை இயற்கையுடன் தியானித்த சில ஞானிகள் அறிகுறிகளை ஆதாரமாகக்கொண்டு இறைமகனைக் கண்டுகொண்டனர் (மத் 2:1-12) தங்கள் தேடலின் விளைவை கண்டுமகிழ்ந்தனர். இன்று அந்த மகிழ்சியில் நாமும் கலக்க வழிவகுத்தனர்.
பாரம்பரியத்தின்படி மெல்கியூர், பல்தசார், கஸ்பார் என்ற ஞானிகள் இயற்கையில்
இறைவனின் வெளிப்பாட்டைக் கண்டனர். தங்கள் அறிவின் பயனாக மீட்பரை அடைந்து, அவரைக்கண்டு, காணிக்கை செலுத்தினர். அறிவின் பயன் இறைவனிடம் சரணடைவதே என்பதை தங்கள் வாழ்வால் காட்டினர். ஞானிகள் என்பது 'மாகோஸ்' μάγος என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கமாகும். பொதுவாக மாய மந்திரங்களால் ஞானம் படைத்தவர், மந்திரவாதி, கனவுக்கு விளக்கமளிப்பவர், மருத்துவர், வானசாஸ்திரி போன்றோரை அக்காலத்தில் மாகோஸ் என்று அழைத்தனர். மத்தேயு குறிப்பிடும் ஞானிகள் 'வான நூல் அறிஞர்கள் போன்றோராக தோன்றுகின்றனர். கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் அண்மைக்காலம் வரை இவர்கள் அரசர்களாகவே கருத்ப்பட்டனர். காரணம் 'மன்னர் பலர் இஸ்ராயேல் அரசனை வழிபட வருவர் அவருக்கு காணிக்கை செலுத்தவர்' தி;.பா 71:10-11), 'எருசலேமே எழுந்திரு ... பொன்னும் தூபமும் ஏந்தியவராய் ஆண்டவருக்குப் புகழ்பாடி வருவர் (எசா 60: 1-6), என்ற இறைவார்த்தைகளின் அடிப்படையில் அரசாகள் என்று அழைக்கப்படிருக்கலாம் ஆனால் இவர்களை ஞானிகள் என்று அழைப்பதே சரியானதாகும்.
விவிலிய அறிஞர்கள் ஞானிகள் வருகைபற்றி பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும் எண்ணிக்கை நூல் 22-24 அதிகாரங்களில், தீர்கதரிசனப் பார்வையுடனும் தெளிவான சிந்தனை நோக்குடனும் குறிப்பிடப்படும் பெத்தோரைச் சார்ந்த பெகாரின் மகன் பிலயாமுடன் ஞானிகளை ஒப்பிடுவது சாலச்சிறந்தது. பிலயாம் கீழை மலைகளிலிருந்து வந்து இஸ்ராயேல் மக்களுக்கு ஆசி வழங்கினார் (எண் 23:7). மத்தேயு குறிப்பிடும் ஞானிகளும் கீழைத்தேயத்திலிருந்தே வந்தார்கள் (மத் 2:1). பிலயாம், 'யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்' என்றார் (எண் 24:17). மத்தேயு குறிப்பிடும் ஞானிகள் விண்மீன் ஏழக் கண்டார்கள் (மத் 2:2). பெரிய மனிதர்களுடைய பிறப்பையோ இறப்பையோ விண்மீன் எழுதலுடன் தொடர்புபடுத்துவதை மத்தேயு தான் வாழ்ந்த வரலாற்றுச் சூழமைவில் இருந்து பெற்றிருக்க முடியும். ஏனெனில் உரோம் நகரை நிறுவிய ஏயேனியாசை விண்மீன் ஒன்று வழி நடத்தியதாக விர்ஜில் எனும் அறிஞர் தனது ஏனேய்டு எனும் நூலிலும், எருசலேம் அழிவிற்கு முன் விண்மீன ஒன்று எருசலேம் நகருக்கு மேல் தோன்றியதாக யேசேப்புஸ் தனது யூதர்களின் போர் என்ற நூலிலும் குறிப்பிடுகிறார்கள். உலக ஞானத்தையும், ஞானிகளையும் கடந்த ஞானத்தின் உறைவிடமானவரை ஞானமுள்ள மனிதர்கள் கண்டுகொண்டார்கள், இறை ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதே கிறிஸ்தவ விசுவாசமாகும்.
இன்று அறிவால் அழிந்து போகும் இவ்வுலக மாந்தருக்கு ஞானிகளின் தேடல் ஓரு சவாலே. அன்று தங்கள் அறிவினாலும், மறைநூல் கொடுத்த நம்பிக்கையினாலும், இயற்கையின் உதவியினாலும் ஞானிகள் மீட்பரை கண்டுகொண்டனர். இன்று எமது அறிவியல் வளர்ச்சியும், நாகரீகத்தின் அதீதபோக்கும், விஞ்ஞானத்தின் விந்தையும் எமது உள்ளத்தில் தங்கியிருக்கும் இறைவனையே நாம் கண்டுகொள்ள தடைபோடுகின்றன. எமது அயலவர் வடிவில் நாளும் எங்களோடு வாழும் இறைவனுடன் நாம் உறவுகொள்ள எம் அகக்கண்களை மறைக்கின்றன.
நாம் உண்மையை புதைத்து பொய்மையில் வளரவும்,
நம்பிக்கையை தொலைத்து சந்தேகத்தில் குழம்பவும்,
இயற்கையை தொலைத்து செயற்கையில் மிளிரவும்
உலகம் எம்மை திசைமாற்றி நகர்த்துவது
எமக்கு தெரியாமலில்லை.
வாழ்வில் பல சுகபோகங்களையும்,
மாயைகளையும் தேடியலையும் நாம்,
நமது தேடலை சற்று இறைவனை நோக்கியதாக திருப்புவோமா?
எமக்குள்ளே இருக்கும் ஞானத்தை கண்டுகொள்வோமா?
அருட்தந்தை றமேஸ் அ.ம.தி
தொடர்பகம்
யாழ்ப்பாணம்
வியாழன், 5 ஜனவரி, 2017


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக