வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

The Immaculate Conception: உலகின் மாந்தருள் அமல உற்பவி, புனித கன்னிமரியாவே!



உலகின் மாந்தருள் அமல உற்பவி,
புனித கன்னிமரியாவே!


கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச வாழ்விலும், அதன் இறையியல் சிந்தனைகளிலும் தனியான இடம் வகிப்பவர் அன்னை மரியா. ஏனெனில் இவ்வுலகில் மனிதனாய் உடலெடுத்த இறைமகன் கிறிஸ்துவின் அன்புத்தாய் இந்த அன்னை. இறை வட்டத்திலிருந்து மனித வட்டத்துக்குள் நுழைந்த, இறைமகன் கிறிஸ்துவை தனது வயிற்றில் கருவாகத் தாங்கி, அவருக்கு மனித உருவம் கொடுத்து, இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர். இது இறைவன் அன்னைக்கு கொடுத்த சலுகை அல்ல, மாறாக இறைவன் அவருக்கு அளித்த மாபெரும் அழைப்பு ஆகும். இத்தகைய உன்னத நிலைக்குத் தேர்ந்து கொள்ளப்பட்டதன் காரணமாக இறைவன் அவரை மாசு மறுவற்றவராக உருவெடுக்கச் செய்தார். இதனால்தான், மரியாவை நாம் அமல உற்பவி என்று அழைக்கின்றோம்.  

சுவக்கீன் (எதிர்பார்த்திருப்பவர்) அன்னா (முடிவற்ற வாழ்வாகிய அருள்) இருவரும் தவமிருந்து பெற்றெடுத்த இணையற்ற செல்வமே எம் அன்னை மரியா. மரியா என்றால் 'ஒப்பற்று உயர்ந்தவள்', 'உன்னத மகிமை கொண்டவள்' எனவும் பொருள்படும். இவர் பிறப்பால் 'மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகிறது' (தீத் 2: 11). எனவே மரியா என்னும் நாமம் மானிடர்க்கு அன்பும் அருளும், ஆற்றலும் அளிக்கும்; கவலையைப் போக்கும்; துன்பத்தை நீக்கும் சோதனையை வெல்லச் செய்யும்; நம்பிக்கையூட்டும்: விசுவாசத்தைக் காக்கும்; வான் வழி நடத்தி, வல்ல பரனடி சேர்த்து என்றென்றும் வாழவைக்கும் என்பது எமது விசுவாசம்.

பரிசுத்த கன்னிமரியா தன் தாயின் வயிற்றில் கருவானதில் எல்லாக் குழந்தைகளையும் போல் பெற்றோரின் பங்கு உண்டு. ஆனால் அவர் மட்டும் சென்ம பாவத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டார். அருள் நிறைந்தவராய் (லூக் 1: 28), அழகில் மிதந்தவராய் உலகில் உருவெடுக்க இறைவன் சித்தம் கொண்டார். அவரே அமல உற்பவி. இந்த அமல உற்பவத்தின் மறையுண்மையை தொடக்க நூலிலே மறைபொருளாக எம்மால் கண்டுணர முடிகிறது. 'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' (தொ.நூல் 3: 15). கீழ்படியாமையால் ஆதாம் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்தான். பாவம் விளைந்தது. ‘ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது’.(உரோ 5: 12). இப்பாவத்தில் இருந்த மனுக்குலத்தை மீட்டெடுக்க, சித்தம் கொண்ட இறைவனின் மீட்புப் பாதையில் தன்னை அடையாளங் கண்டு கொண்டதன் விளைவாக, அவர் 'நாமே அமல உற்பவம்' என சுட்டிக்காட்டுகிறாள். பெர்னபெத் என்கின்ற சிறுமிக்குத் தோன்றிய அன்னையிடம் ‘அம்மா,  தங்கள் பெயர் என்ன’ என்று கேட்டதற்கு அன்னையின் பதில் 'நாமே அமலோற்பவம்'. தன்னில் இருப்பதும் இயங்குவதும் ஆண்டவரின் அருங்கொடையன்றி வேறல்ல என்பதனை உணர்ந்த அன்னை, ‘ஏனெனில் வல்லவராம் கடவுள்எனக்கு அரும்பெரும்
செயல்கள் செய்துள்ளார்’. (லூக் 1: 49), என தன்னில் இறைத்திட்டத்தை புரிந்து கொண்டார். 

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜஸ்ரின் எனும் திருச்சபை தந்தை, மரியாவை ஏவாளுடன் ஒப்பிடுகிறார். இறைவன் தந்த அருள்வாழ்வு, ஏவாள் மூலமாக அழிக்கப்பட்டதாகவும், இரண்.டாவது ஏவாளாகிய மரியா மூலமாக அவ்வருள் மீண்டும் மனுக்குலத்திற்கு கிடைப்பதாகவும் எடுத்துரைக்கின்றார். 'ஏவாள் பாம்புருவான, கெட்ட தூதனின் வார்த்தையை நம்பினாள். கன்னிமரியாள் கபிரியேல் தூதரின் வார்த்தையை நம்பி விசுவசித்தார். ஒரு பெண், வார்த்தையை நம்பி இழைத்த தீமையை மற்றொரு பெண், வார்த்தையை நம்பி பெற்றுக் கொண்டாள் (De Carne Christi). 'ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு, மரியாளின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டது' (De Haeres V -19). இவ்வாறாக புனித ஜஸ்ரின், தேர்த்துல்லியன், புனித இரேனியூஸ் போன்றவர்கள் ஏவாளோடு புனித மரியாளை ஒப்பிட்டு அமல உற்பவ மறையுண்மையைப் போதிக்கிறார்கள். மரியாவின் அமல உற்பவம் பற்றிய உண்மையை தெளிவுற எடுத்தியம்பியவர் பிரான்சிஸ்கன் சபைத் துறவி அருளப்பர் டன்ஸ் ஸ்கொட்டஸ் என்பவரே. 'இறைவனின் தாய் எனப்படுபவள் ஒருகணம் கூட பாவத்தின் பிடியில் இருக்கவே முடியாது' என்று பறைசாற்றினார். 

மரியாளின் அமலோற்பவம் மனிதக் கண்டு பிடிப்பு அல்ல. மனித புத்தியினால் இதற்கு விளக்கம் காண்பது கடினமானது. இறைவனின் திட்டத்தில் தோன்றிய இந்த விசுவாச சத்தியத்தை திருத்தந்தை 9ம் பத்திநாதர் 1854ம் ஆண்டு மார்கழி மாதம் 8ம் திகதி, முழுக்கத்தோலிக்கத் திருச்சபையும் ஏற்றுக் கொள்ளும் விசுவாச சத்தியமாக பிரகடனம் செய்தார். இதனை நாம் விசுவாசத்தினால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். மிரியா தனது பிறப்பினாலே மட்டுமல்ல, தனது தூய்மையான வாழ்வினாலும் மாசற்றவராகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய சமுதாயத்தில் பல தவறான போதனைகளினாலும், முரண்பாடுகளினாலும், விளக்கக் குறைவுகளினாலும், அறியாமையினாலும் அன்னையின் புனிதத் தன்மையில் வினா எழுப்பும் அவிசுவாசிகளுக்கு, உண்மையைப் புரிய வைப்பது கத்தோலிக்க திருச்சபையில் அங்கம் வகிக்கும் எம் எல்லோரினதும் உயரிய பொறுப்பாகும். விஞ்ஞானத்தின் விஞ்சிய வளர்ச்சியினாலும், நாகரீகத்தின் அதி நவீன முன்னேற்றத்தினாலும், அறிவு விருத்தியினாலும் கடவுளே இல்லை என்று வாழும் மனிதர்கள் மத்தியிலும், மனித வல்லமையால் எதனையும் சாதிக்கலாம் என எண்ணி மனிதத்தை நாசம் பண்ணும் மனிதர்கள் மத்தியிலும், மண்டை ஓடுகளை பிரசவிக்கும் மதவெறியர்கள் நடுவிலும், வாழும் அன்னையின் அன்புப் பிள்ளைகளாகிய நாம், அன்னையின் மாசற்ற வாழ்வினூடாக தூய்மையான வாழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இவ் அழைப்பை உணர்ந்து எம் வாழ்வை அன்னையின் பாதையில் அர்ப்பணித்து வாழ்ந்தால் இறைவனின் அருட்கொடைகளை நிறைவாக பெற்று வாழலாம். 'நாமே அமலோற்பவம்' என்று கூறும் அன்னையின் குரலொலியையும் கேட்டு மகிழலாம். 

அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்
(லூக்கா 1,28)
   

அருட்தந்தை யா. றமேஸ் அ.ம.தி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக