வழியும் உண்மையும் வாழ்வும் நானே.
14,05,2017
யோவான் நற்செய்தி தரும் அடையாளங்களில், இன்றைய நற்செய்தி கொண்டுவரும் அடையாளங்கள் ஆழமான சிந்தனையைத் தூண்டுகின்றன. கலக்கத்தால் நிறைந்திருந்த சீடர்களின் இதயங்களுக்கு இயேசுவின் ஆறுதல் மொழிகள் நம்பிக்கையை கொடுத்தனவா? அவை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றனவா என்று பார்ப்போம்?
அ. கலக்கம் வேண்டாம் நம்பிக்கை கொள்ளுங்கள்:
ஏன் சீடர்கள் கலக்கம் கொள்வதாக யோவான் காட்டுகிறார்? ஆண்டவரே தம்மோடு இருக்கும் போது, ஏன் இவர்கள் கலக்கம் கொள்ள வேண்டும்? ஏன் ஆண்டவர் தன் மீது இந்த சிறியவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என கேட்கிறார்? நம்பிக்கையின்மைதான் கலக்கத்தின் காரணம் என ஆண்டவர் நன்கு அறிந்திருப்பதால்தான் இவ்வாறு ஆண்டவரே மனிதரிடம் வேண்டுதல் வைக்கிறார் எனலாம். நம்பிக்கையில்லாமல் மருத்துவம் மேற்கொள்வோர் குணமடைந்தாலும், வாழ்வதில்லை. நம்பிக்கையில்லாமல் பரீட்சை எழுதுவோர், அறிவுத் தகுதியிருந்தாலும் நல்ல பெறுபேறு பெறுவதில்லை. நம்பிக்கையிழந்தால் நீச்சல் வீரர் கூட தண்ணீரில் மூழ்கலாம். இவை நாம் உலகில் பார்க்கின்ற, வாசிக்கின்ற கதைகள் அல்ல, நிஜங்கள். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் போதாது மாறாக கடவுளின் உண்மை சாயலான இயேசுவிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் நம்பிக்கை வைப்பது போல நடிக்கலாம், ஆனால் கண்ணுக்கு தெரியும் கடவுளிடம் நம்பிக்கை வைக்காவிடில் கலக்கம் தொடரும் என்பது போல யோவான் சுட்டிக்காட்டுகிறார்.
ஆ. ஆண்டவரின் உறைவிடங்கள்:
பரலோகத்தின் அழகையும் மாயைகளையும் காட்டியே அதிகமான மதங்களும் மதப் பரப்பிகளும், மக்களை மயக்கத்தில் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். மதம் ஒரு போதை என்றார் யேர்மனியாரான நிட்சே. இயேசு சொல்கின்ற உறைவிடங்களின் அழகை, உலக அறிவைத் தாண்டி மெய்யறிவுடன் நோக்க வேண்டும். உலகிலேயே மாட மாளிகையை விரும்பாத இந்த இறைவன் நிச்சயமாக மாடங்களைப் பரலோகத்தில் கட்ட முயல மாட்டார் எனலாம். என்ன இந்த உறைவிடங்கள்? இதுவும் யோவானின் அடையாளங்களில் ஒன்று. கிரேக்க மொழி இந்த உறைவிடங்களுக்கு மொனொய் என்ற சொல்லை பாவிக்கிறது. இது ஓய்வு எடுக்கும் இடங்களைக் குறிக்கும். யோவானின் கழுகுப் பார்வையில் இது தந்தை மகனுக்கு இடையிலான உறவைக் குறிக்கும், அல்லது கடவுள் மக்களுக்கிடையிலான உறவைக் குறிக்கும். இது தற்காலிக ஓய்வறை அல்ல மாறாக நிரந்தர வசிப்பிடம். அதாவது இது கடவுள் மனிதருக்கிடையிலான நிரந்த உறவின் அடையாளம். இந்த உலகில் தொடர்ந்து வறுமையிலே வாடுவோம், வீடில்லாமல் அநாதரவாக அலைவோம், உரிமையில்லாமல் சோம்பித் திரிவோம், ஆனால் பரலோகத்தில் பல அடுக்குமாடிகள் கிடைக்கும் என படுத்து படுத்து கனவு காண்போருக்கு நிச்சயமாக பரலோகத்தில் ஒரு பாய் கூட கிடைக்காது.
இ. ஆண்டவரின் வழி தெரியாதாம்:
ஆண்டவர் தான் தந்தையிடம் போவதாக சொல்கிறார், அந்த இடத்திற்கான வழி தன் சீடர்களுக்கு தெரியும் என்கிறார், ஆனால் சீடர்கள் தங்களுக்கு தெரியாது என்கிறார்கள். யோவான், தன் தலத் திருச்சபையின் நிலையை காட்ட தன் சக திருத்தூதர் தோமாவை பாவனைக்கு எடுக்கிறர். தோமா, 'எங்கே போரீர் என்டே தெரியா, பின்ன பாதை எப்புடி தெரியுமாம்' என்கிறார் தோமா, சற்று விரக்தி அடைந்தவராக. ஆண்டவர் ஞானத்தை பற்றி பேச இவர் அறிவைப் பற்றி விவாதிக்கிறார். உண்மையான இலக்கு தெரியாதவர்க்கு பாதைகள் தெரிய வாய்ப்பில்லை. தோமா தன்னுடைய வார்த்தைக்கு உண்மையாக இருக்கிறார். இன்றைய பக்திமுத்தி, ஆனால் கிறிஸ்தவ அறிவில்லாத, மூடநம்பிக்கைகாரர்களைவிட, இந்த உண்மையான சந்தேகக்காரர் எவ்வளவோ மேலானவர். இதனால்தான் என்னவோ இவர் நம்பிக்கையில் திருத்தூதராக மரித்தார்.
ஈ. இயேசுதான் வழியும், உண்மையும் வாழ்வும்:
வழி, உண்மை மற்றும் வாழ்வு, இந்த மூன்று சொற்களும் கிரேக்க மெய்யறிவு உலகத்தில் மிக முக்கியமானவை. உரோமையர்கள் தங்கள் பேரரசை பாதுகாக்க பாதைகளை திடப்படுத்தினார்கள். பாதைகளை கிரேக்கம் ஹோதோஸ் என்று சொல்கிறது. இவர்கள் விசாலமான பாதைகளை அமைத்தார்கள். போர்க் காலத்தில் தமிழர்களை கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் வழிகளை அடைத்தார்கள், அல்லது வழிகளை ஆபத்தாக்கினார்கள். அதனைப்போல இன்று உலகில், அதிகமான நாடுகள் பாதைகளை பெரிதாக்கி அதனால் பயணங்களை இலகுவாக்க முயல்கின்றார்கள். கடன்பட்டாவது இதனை செய்ய முயல்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான், விரைவு வீதிகள், மேம் பாலங்கள், நிலக்கீழ் வீதிகள், தண்டவாளங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். உலகின் பாதைகள் பெரிதாக பெரிதாக, பயணங்களும் பெரிதாகின்றன அதன் செலவுகளும் பெரிதாகின்றன. பாதைகளை போலவே விபத்துக்களும் இன்று சாதாரணமாகின்றன. ஆண்டவர் சொன்ன பாதை இதுவல்ல. ஆண்டவரின் பாதை கழைப்பில்லாத, ஆபத்தில்லாத, இனிமையான பாதை ஆனால் தியாகங்கள் நிறைந்த பாதை.
உண்மை, இன்றைய உலகில் அரிதான பொக்கிசம். கிரேக்கம் இதனை அலேதெய்யா என்று சொல்கிறது. பிலாத்துவிற்கு புரியாததால் தான் என்னவோ, உண்மையென்றால் என்னவென்று இயேசுவிடமே கேட்டான். இன்று உண்மையை விட, 'அர்த்தம்' என்பதுதான் உலகை ஆட்சிசெய்கிறது. திரிக்கப்பட்ட உண்மைகள், மாற்றப்பட்ட உண்மைகள், மறைக்கப்பட உண்மைகள் மற்றும் உண்மைபோல காட்சிதரும் பொய்கள், இவைதான் இன்றைய உலகின் விவேகங்கள். இயேசு சொல்லும் உண்மை இதுவல்ல, அது உண்மையான உண்மை. அதனை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவத்தை இன்னமும் உலகம் பெறவில்லை என்பது போலவே தோன்றுகிறது.
வாழ்வு, மனிதர் இறுதிவரை தேடுவது, இறுதியில் தொலைப்பது. இதனை கிரேக்கம் ட்சோஏ என்று சொல்கிறது. வாழ்வு தருவதாக இன்றைய அரசியல் தலைவர்களும், வியாபார தலைவர்களும், மதத் தiலைவர்களும் பிரச்சாரம் செய்தும், இறுதியாக அவர்கள் தருவது செலவுகளையும், கவலைகளையும், நோய்களையுமே. வாழ்வை உருவாக்காதவர்கள், வாழ்வை பாதுகாக்காதவர்கள் அதனை தரமுடியாது. இதனால்தான் மனிதர்கள் வாழ்வை தரமுடியாது. வாழ்விற்கு சொந்தக்காரர், ஆண்டவர், அதாவது இயேசுவால்தான் அதனை தரமுடியும். மனிதர்கள் வரலாற்றில் தமது வாழ்வுக்காவும், தம்மவர்களின் வாழ்விற்காவும், பல ஆயிரம் உயிர்களின் வாழ்வை பறித்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
உ. இயேசுவின் அறிவு தந்தையின் அறிவு:
கடவுள் ஒரு தேடல். இந்த தேடல் முடிவடையாத தேடல் ஆனால் இது சாத்தியமான ஒரு தேடல். இயேசு சீடர்களோடு மூன்று வருடங்கள் வாழ்ந்தார். அவர் சொற்களை, அவர் உணர்வுகளை, அவர் செயற்பாடுகளை சீடர்கள் அறிந்தார்கள். இருப்பினும் அவர்தான் தந்தை, தந்தைதான் இயேசு என்பதை கண்டும், புரியாதிருந்தார்கள். இயேசு இந்த உண்மை அவர்களுக்கு தெரியும் என்கிறார், ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்கின்றனர். இதுதான் கையில் உணவிருந்தும், பசியால் வாடுகிறது என்பது. பிலிப்பு, இவர் யோவானிற்கு இன்னொரு உடன் திருத்தூதர். யோவான் இவரையும் விட்டுவைக்கவில்லை. பிலிப்பு இயேசுவிடம் தந்தையை காட்டும் என்கிறார், இயேசு, தான் ஏற்கனவே காட்டிவிட்டேன் என்கிறார். கடவுள் தரவில்லை என்பதைவிட நாம் பெறவில்லை என்பதே இங்கே மறைமுகமாக நம்மை எச்சரிக்கிறது. இயேசுவை தம் மதத்தில் கொண்டவர், பெயரில் கொண்டவர், ஆலயத்தில் கொண்டவர், பாரம்பரியத்தில் கொண்டவர், எப்படி இயேசுவிற்கு எதிரான செயல்களை செய்ய முடியும்? அதாவது கிறிஸ்தவர் எப்படி எதிர்கிறிஸ்தவராக வாழ முடியும்? இப்படிவாழ்ந்தால் அது முரண்பாடு. அதாவது இயேசு உள்ளத்தில் மட்டுமல்ல வாழ்விலும் வாழப்படவேண்டியவர். ஆராதனை மட்டுமல்ல அறிக்கையும் செய்யப்பட வேண்டிவர்.
ஊ. வார்த்தையின் பொருட்டு அல்லாவிடினும், செயல்களின் பொருட்டாவது நம்புதல்:
வார்த்தை மற்றும் செயல்கள். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. ஒன்று இன்னொன்றை புறக்கணிக்கக் கூடாது. ஒருவரின் வாக்கிற்கும் செயலிற்கும் வித்தியாசம் கண்டால், அவரை உலகம் புறக்கணிக்கும். இப்படியிருக்க ஏன் இயேசு, வார்த்தையின் பொருட்டு இல்லாவிட்டாலும், செயல்களின் பொருட்டாவது நம்புங்கள் என்கிறார்? அவர் தன்னுடைய வார்த்தை பொய்த்துவிட்டது என்று சொல்லவில்லை. மாறாக தன்னுடைய வார்த்தை, செயல்களிலே உறுதிப்படுத்தப்படுகிறது என்கிறார். செயல்களைப் பார்த்தாவது, வார்த்தை உண்மையானது என நம்பச் சொல்கிறார். இந்த உலகம் அதிகமான பிரசங்கிகளையும், பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியிருக்கிறது, ஆனால் சாட்சியாளர்களை உருவாக்குவதில் மந்தமாகவே இருக்கிறது.
இயேசு ஒரு சாட்சியாளர். அவர் செய்ததைச் சொன்னார், சொன்னதை செய்தார். இதனையே நம்மிடமும் எதிர் பார்க்கிறார். இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் அவர் செய்ததைப் போல, ஏன் இன்னமும் அதிகமாக செய்யலாம் என்கிறார்.
இறுதியாக, இந்த உலகின் பாதைகள், உண்மைகள், மற்றும் வாழ்வுகள், மாயை நிறைந்ததாகவும், ஆபத்துக்களை உருவாக்குவனவாகவும் மட்டுமே இருக்கின்றன. இதனால்தான் என்னவோ, தக்கன பிளைக்கும் என்ற கருதுகோள் இன்னமும் அறிவியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இயேசுவின் பாதையை, உண்மையை மற்றும் வாழ்வை பின்பற்றினால், தக்கன மட்டுமல்ல, பெலவீனமானதும் பிளைக்கும்.
இயேசுவில் அன்புடன் பாதையையும், உண்மையையும், வாழ்வையும் தேடுவோம். அவற்றை உலகில் தொலைக்காமல் இருப்போம்.
மி. ஜெகன்குமார் கூஞ்ஞ அமதி
அமதியகம்,
வவுனியா
சனி, 13 மே, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக