வியாழன், 4 மே, 2017

Fourth Sunday of Easter, பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு (அ)

பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு ()
07,05,2017

ஆயனும் ஆடுகளும்


முதல் வாசகம்: திருத்தூதர் 2,14.36-41
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 23
இரண்டாம் வாசகம்: 1பேதுரு 2,20-25
நற்செய்தி: லூக்கா: யோவான் 10,1-10


இந்த வாரத்தின் வாசங்கள் ஆயன், ஆடுகள் என்ற தலைப்பில நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகள், குழப்படியான ஆடுகளை கருப்பு ஆடுகள் எனவும், பொல்லாத ஆயர்களை கருப்பு மேய்ப்பர்கள் என முத்திரை குத்துகின்றன. கருப்பு என்ன அவ்வளவு இழக்காரமா அல்லது கருப்பு தீமையின் அடையாளமா? என்ற பல கேள்விகள் என்னுள்ளே எழுகின்றன. மேலைத்தேயர்கள் வெள்ளை நிறமாக இருக்கிற படியால், தீமையை அவர்கள் கருப்பு என்று சொல்கிறார்கள். இதனால்தான் சாத்தானை இவர்கள் கருப்பு நிறத்தாலும், வானதூதர்களை வெள்ளை நிறத்தாலும் வர்ணிக்கிறார்கள் போல. நம்ம வடிவேல் கூட 'சிவப்பாயிருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என சொல்லி' நம் புத்தியை கிண்டலடிப்பார்
யோவான் இன்றைய வாசகத்தில் நம்மை ஆடுகள் என்கிறார். நாம் ஆடுகளாக? ஆடுகளுக்கு மூன்றறிவு என்றால் நமக்கு ஆறு அறிவுகள் அல்லவா இருக்கின்றன? யோவான் இந்த நற்செய்தியை உருவகமாக பாவிக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்

1. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
இந்த உலகம் அதிகமான ஆயர்களை கண்டிருக்கிறது, அவர்களில் அதிகமானவர்கள் பயங்கரமான ஆசாமிகள். தங்கள் சொந்த ஆடுகளின் இரத்தத்தை குடித்தே கொழுப்பேற்றியவர்கள். இவர்களை யார் ஆயர்களாக ஏற்படுத்தினார்? இவர்களும், இவர்கள் சகபாடிகளும், அத்தோடு சோம்பேறி ஆடுகளும், இவர்களை கடவுள்தான் ஆயர்களாக ஏற்படுத்தினார் என உசுப்பேத்துகிறார்கள். இந்த உலகில் நடந்த, நடக்கிற மற்றும் நடக்க போகிற அனைத்து தீமைகளுக்கும் இவர்களே பொறுப்பு. நேரமும், சொத்தும், சந்தர்ப்பமும் இவர்கள் கையில் இருப்பதனால் இவர்கள் ஆயர்கள் ஆகிறார்கள்

2. சோம்பேறி ஆடுகள்
உலகத்தின் தீமைகளுக்கு பொல்லாத ஆயர்கள் எவ்வளவு காரணமோ, அதேபோலத்தான் சோம்பேறி ஆடுகளும் அதற்கு காரணமாகிறார்கள். மனிதர்கள் (கிறிஸ்தவர்கள்) தங்களை ஆடுகள் என்று சொல்லி சொல்லியே அனைத்திற்கும் தலையாட்ட பழகிவிட்டார்கள். ஒரு சோம்பேறி ஆடு முன்செல்ல அனைத்து சோம்பேறி சகோதர ஆடுகளும் பின்செல்கின்றன, இதனை கீழ்படிவு என்று வேறு சொல்கின்றன. அனைத்து அழிவுகளுக்கு இந்த ஆடுகளும் பொறுப்பு

3. நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.
யோவான் நற்செய்தியின் மிகவும் அழகான வரிகளில் இதுவும் ஒன்று. செம்மறி பாவம் அறியாதது என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. அதனையே யோவான் இயேசுவின் சீடர்களுக்கு பொருத்துகிறார். இந்த உலகின் ஆயர்கள் தருகின்ற மந்தை நிலங்கள், ஆடுகளுக்கு நிறைவையல்ல மாறாக பசியையும் போட்டியையுமே ஏற்படுத்துகின்றன. ஆனால் இயேசு என்கின்ற ஒரே ஒரு நல்ல ஆயன் தருகின்ற மேய்ச்சல் நிலம் மட்டுமே நிறைவையும், வாழ்வையும் தருகின்றன. ஏனெனில் இங்கே அவர்தான் மேய்ச்சல் நிலம், அவர்தான் அந்த நிறைவு, அவர்தான் அந்த உணர்வு
ஆடுகள் என்பது ஒரு அடையாளமே, நாம் ஆடுகள் அல்ல, அவர் மக்கள். ஆடுகள் என்ற உருவகத்திலிருந்து வெளியில் வந்து, நாம் அவர் மக்கள் என்பதை சிந்திப்போம். சோம்பேறி ஆடுகளாக இருக்காமல், இவர் தந்த ஞானத்தைக் கொண்டு சிந்தித்து, நல்ல ஆயர்களுக்கும் தீய ஆயர்களுக்கும் வித்தியாசம் காண்போம். தவறான தலைமைத்துவம் மட்டுமல்ல, மாறாக தவறான தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதும் ஆபத்தானது

பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார்
அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்

மி. ஜெகன்குமார் கூஞ்ஞ அமதி

வெள்ளி, 5 மே, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக